விவிஐபிகளுக்கான ஹெலிகொப்டர்களை வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத்தரகர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக், சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக 12 ஹெலிகொப்டர்களை வாங்க இந்திய இராணுவ அமைச்சகம் டெண்டர் விட்டது.
இதில், இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட்(AgustaWestland) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.
ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் 12 ஹெலிகொப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இந்த பேரத்தில், ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது, இந்த ஹெலிகொப்டர் பேரத்தில் முக்கிய தரகராக செயல்பட்டவர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக்(வயது 62). இவர் சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி நாட்டு லா ரிபப்ளிகா செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கெய்டோவை சுவிஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவரை இத்தாலிக்கு நாடு கடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கெய்டோ பெடரல் கோர்ட்டில் அப்பீல் செய்யாவிட்டால் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு வாரத்தில் இத்தாலிக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தியாகி, ஹாஸ்செக் உள்ளிட்ட 13 பேரின் பெயரைச் சேர்த்துள்ளது.
தற்போது கைதாகியுள்ள ஹாஸ்செக்கும், இன்னொரு இடைத்தரகரான கார்லோ ஜெரோசா என்பவரும், மொஹாலியைச் சேர்ந்த ஐடிஎஸ் இன்போடெக் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஆரோமேட்ரிக்ஸ் இன்போ சொலூசன்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு 50 மில்லியன் ஈரோ லஞ்சப் பணத்தை அனுப்பி வைத்ததாக சிபிஐ கூறியுள்ளது.
மேலும் 2.43 கோடி ஈரோ லஞ்சப் பணத்தை அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கிய இவர்கள், அதை ஐடிஎஸ் துனிஷியா நிறுவனத்தின் கணக்கில் சேர்த்துள்ளனர் என்றும் சிபிஐ கூறுகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் இத்தாலிய புலனாய்வு அமைப்புகள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க, அகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்தின் மூல நிறுவனமான பின்மெக்கானிகாவின் தலைமை செயலதிகாரி, இடைத்தரகர்களைப் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக