வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஈழத்தமிழரவை சுவிஸ் பாராளுமன்ற வெளிவிவகாரப் பிரிவை சந்தித்தது

சுவிட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்ற வெளிவிவகாரப் பிரிவை சுவிஸ் ஈழத்தமிழரவை சந்தித்து, தமிழீழ மக்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், தேவைகளையும் விளக்கினர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் இலையுதிர் காலத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் கடந்த 3 கிழமைகளாக இடம்பெற்றுவருகிறது.

வருடத்தில் நான்கு பருவகாலங்களையும் ஒட்டி கூடும் தேசிய பாராளுமன்றமானது, பலதரப்பட்ட அரசியல் நிலவரங்களையும் ஆராய்ந்து திட்டமிடல்களையும் மேற்கொள்ளும்.

இதனையொட்டி சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களின் சனநாயக அரசியல் அவையான சுவிஸ் ஈழத்தமிழரவை, பாராளுமன்ற வெளிவிவகாரப்பிரிவுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இச்சந்திப்பில் தமிழர்கள் தாயகத்திலும், சுவிசிலும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மற்றம் அண்ணளவாக 60000 ஆயிரம் தமிழ் மக்களை கொண்டுள்ள சுவிட்சர்லாந்து நாடு தனது வெளிவிவகார செயற்பாடுகளில் இங்குள்ள தமிழர்களை ஒதுக்கிவைத்து செயற்படும் 
அசமந்தப்போக்குகள் பற்றியும், மனிதாபிமானமற்ற அகதிகள் பற்றிய சட்ட இறுக்கமும் 
அதனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும், சுவிஸ்வாழ் தமிழர்களின் உரிமைகளை பயங்கரவாத சாயம்பூசி 
கட்டுப்படுத்தும் சட்டவிரோத நடைமுறைகள் பற்றியும், பெரும்பாண்மைத் தமிழர் 
சமூகத்தின் பிரதிநிதிகளை புறந்தள்ளி தமிழர் விரோத சக்திகளுடன் இணைந்த ஒருதலைப்பட்சமாக சுவிஸ் செயற்படும் அரசியல் நெறிமுறை பற்றியும் விவாதங்கள் இடம்பெற்றன.

இச்சந்திப்பில் இறுதியாக எதிர்காலத்தில் தமிழர்கள் எப்படியான செயற்பாடுகளை வரவேற்போம், எவற்றை சவால்களாக கருதுவோம் என்ற சரியான விளக்கமும் வளங்கப்பட்டு எதிர்கால இணைந்த கூட்டுவேலைத் திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

அத்துடன் வடமாகாண சபையின் இனப்படுகொலைத் தீர்மானம் பற்றி எடுத்துக்கூறப்பட்டதுடன், இன்றுபோல் என்றம் சர்வதேச சுயாதீன நீதி விசாரணைக்கே சுவிஸ் ஆதரவளிக்க வேண்டுமென்றும் சுவிஸ் வாழ் தமிழர்கள் சார்பாக சுவிஸ் ஈழத்தமிழரவையால் வேண்டிக் கொள்ளப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.