ஞாயிறு, 11 மே, 2014

பண விவகாரத்தில் தகவல்களை தர முடியாது: சுவிஸ்

 இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன.
இந்த விவகாரத்தில் ஜேர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல்களை இந்திய அரசு உயர்நீதிமன்றம் தாக்கல் செய்தது. இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பண கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு சுவிஸ் நிதியமைச்சர் ஈவ்லின் வித்மர் ஸ்லம்புக்கு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தில் எச்எஸ்பிசி வங்கி கிளைகளில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களின் கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் தகவல்களை தர முடியாது என சுவிஸ் மறுத்துள்ளது.
இதுகுறித்து சுவிஸ் நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், வரி ஏய்ப்பு செய்வோர் மீது இந்தியாவை போலவே சுவிஸ் அரசும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது. இந்தியா மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு இடையே கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச வரி விதிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இரட்டை வரிவிதிப்பு முறை நடைமுறையில் உள்ளது.
வங்கி தொடர்பாக ஏற்கனவே இந்தியா கோரி வந்த பல்வேறு கோரிக்கைகளில் சுவிஸ் முடிந்தவரை சாதகமான பதில்களை அளித்து வந்துள்ளது.
தற்போது சர்வதேச விதிகளின்படி ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்ட தகவல்களை தர இயலாது என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.